ஏவுகணைகள் நிகழ்த்தும் போருக்கு இணையானது கருத்தியல் போர் – இயக்குநர் ராஜு முருகன்

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார். இந்தப் பட டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘நீளிரா’ பட விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் ராஜூ முருகன், “உலகில் இன்று ஏவுகணைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தும் போருக்கு இணையாக, சத்தமில்லாமல் ஒரு ‘கருத்தியல் போர்’ நடந்து கொண்டிருக்கிறது. அணுஆயுதப் போரை விடவும் இது மிக முக்கியமானது. இதற்கு உதாரணமாக இஸ்ரேல் தேசம் உருவான வரலாற்றைச் சொல்லலாம்.

அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளும் தங்கள் கலாசாரத்தை உலகிற்குச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தின. ஆனால், உலகின் முன்னோடி மொழியான தமிழிலிருந்து அத்தகைய உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை என்பது வருத்தமான உண்மை. ஈழப் போராட்டம் என்பது உலகம் வியந்து பார்த்த 50 ஆண்டு காலப் போராட்டம். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் வேறு எந்த இனத்திலாவது நடந்திருந்தால், அது குறித்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருக்கும்.

ஆனால், தமிழில் அப்படி ஒன்றுகூட வரவில்லை. இதற்குத் தணிக்கைக் குழுவின் அரசியல் கெடுபிடிகள், படைப்பாளிகளிடம் உள்ள இறக்குமதி சிந்தனை மற்றும் வியாபாரச் சந்தை ஆகிய மூன்றுமே முக்கியக் காரணங்கள். இவ்வளவு பெரிய போர் நடந்தும் உலக அளவில் ஒரு ஈழப் படம் கூட வரவில்லையே என்ற ஏக்கத்தை உடைக்கும் முதல் படமாக நீளிரா இருக்கிறது. நவீன சினிமாவின் நேர்த்தியோடு எடுக்கப்பட்ட முதல் ஈழ சினிமா இதுதான் என்று நான் சொல்வேன்.

இயக்குநர் சோமிதரனை எனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு குறித்த ஆவணப்படத்திலிருந்தே தெரியும். ஈழத்தின் வலியை உலகிற்குச் சொல்ல வேண்டும் எனத் தொடர்ந்து இயங்கும் அவர், இந்தப் படத்தில் ஒரு வன்முறைக் காட்சி கூட இல்லாமல் ஒரு மாபெரும் யுத்தத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். தணிக்கைக் குழுவிடமிருந்து இந்தப் படத்தை மீட்டு வந்த அவரது புத்திசாலித்தனம் வியக்கத்தக்கது. மிக முக்கியமாக, இந்தப் படம் எந்த இடத்திலும் வெறுப்பை விதைக்கவில்லை.

சொந்த மக்கள் சாகக் கூடாது என்று நினைக்கும் போராளிகள், சமாதானத்திற்காக வந்தோம் என்று சொல்லும் இந்திய அமைதிப்படை என அனைத்துத் தரப்பு நியாயங்களையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். வெறுப்புக்கு எதிராக மனிதாபிமானத்தைப் பேசுவதே இன்றைய படைப்பாளிகளின் கடமை. ஈழ அரசியல் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத ஒருவரைக்கூட, ஒரு சிறந்த ‘திரில்லர்’ படமாக இந்தப் படம் கட்டிப்போடும். கார்த்திக் சுப்பராஜ் போன்ற ஒரு தயாரிப்பாளர் முன்வராதவரை இதுபோன்ற படங்கள் சாத்தியமில்லை. இந்தப் படத்தை ஒரு சிறந்த சினிமாவாக தமிழுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் அளித்த இயக்குநர் சோமிதரன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்

Source link