வாஷிங்டன்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் இன்று ஒரு மாதத்தை தொட்டுள்ளது. இப்போரில் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரான் ராணுவத்தின் வலிமையை சிதைத்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிவருகிறார். ஆனால் ஈரான் ராணுவம் தினமும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஈரான் ராணுவம் தனது திறனை இழக்கவில்லை. என்று கூறப்படுகிறது.
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய 2 போர்க்கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையே மோதல் நீடித்து வரும் சூழலில் மேலும் ஒரு போர்க்கப்பலை கடற்படை வீரர்களுடன் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்தது.
அதன்படி யு.எஸ்.எஸ். திரிபோலி போர்க்கப்பல், 3,500 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் சிலநாட்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த போர்க்கப்பல் தைவான் அருகே பயிற்சிகளை நடத்திய பிறகு ஜப்பானை தளமாக கொண்ட 31-வது கடற்படை பயணப்பிரிவு வீரர்களுடன் தனது பயணத்தை மேற்கொண்டது.
இந்தநிலையில் யு.எஸ்.எஸ்.திரிபோலி போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்த்தை அடைத்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறும்போது, யுஎஸ் எஸ் திரிபோலி போர்க்கப்பலில் பயணித்த அமெரிக்க கடற்படையினரும் மரைன் படையினரும் மத்திய கிழக்கு எல்லைக்குள் வந்தடைந்தனர் என்று தெரிவித்தது. யுஎஸ். எஸ் திரிபோலி போர்க்கப்பல் போக்குவரத்து மற்றும் தாக்குதல் போர் விமானங்கள், நீர் நிலத்தாக்குதல் உள்ளிட்ட போர் திறனை கொண்டதாகும்.
அந்த போர்க்கப்பலுடன் மேலும் சில கடற்படை கப்பல்களும் சென்றுள்ளன. இதன்மூலம் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரம் அமெரிக்க படைகளுக்கு துணையாக இந்த கடற்படை வீரர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.
இது கடந்த 20 ஆண்டுகளில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக பெரிய படை குவிப்பாகும்.
இதற்கிடையே ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டிரம்ப் கூறி வருகிறார். ஆனாலதை ஈரான் மறுத்து வருகிறது.துருக்கி, எகிப்து,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மத்திய்ஸ்தம் செய்து வருகிறது. இந்தநிலையில் ஈரானுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் வாரக்கணக்கில் நீடிக்கும் தரைவழி நடவடிக்கைளுக்கான திட்டங்களை அமெரிக்க ராணுவ தலைமைகமான பென் டகன் தயாரித்து வருவதாக வாஷிங்டன் போஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஈரானின் கார்க் தீவு மற்றும் மற்றும்ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கடலோர பகுதிகளில் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுளாகவும், இதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் வழங்கவில்லை. என்றும் தெரிவித்து உள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர், வான்வழித் தாக்குதலாகவே நடைபெற்று வருகிறது. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இன்னும் தங்களின் படை வீரர்களை ஈரானுக்குள் இறக்கவில்லை. தரைவழியான தாக்குதல் என்பது ஈரானில் வேலைக்கு ஆகாது என வல்லுநர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஈரானின் புவியியல் அமைப்பு அவர்களுக்கு இயற்கை காவலனாக இருப்பதாக கூறப்படுகிறது. தரை வழி தாக்குதலை நம்பி ஈரானில் களமிறங்குவது கன்னி வெடியில் கால் வைப்பதற்கு சமம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், தரைவழி தாக்குதல் இன்றி அமெரிக்கா தொடங்கிவைத்த இந்த போர், அமெரிக்காவுக்கு எவ்வித முழுமையான பலனையும் தராது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
