திருவனந்தபுரம்,
மலையாள திரையுலகின் டாப் நடிகராக இருப்பவர் மம்முட்டி. 73 வயதான மம்முட்டிக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ரியாட்’ படம் வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மம்முட்டி அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். உடல் நல பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 ரசிகர்களுடன் மம்முட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கொச்சியில் உள்ள கோல்கேட் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், இன்னும் 2 கட்டங்களாக ரசிகர்களுடன் மம்முட்டி புகைப்படம் எடுக்க உள்ளார். அதில் 14 மாவட்டங்களில் இருந்து சுமார் 6000 பேர் பங்கேற்க உள்ளனர். மம்முட்டி ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
