எனதருமை வாக்காளர் பெருங்குடி மக்களே.. தலைவர்கள் களம் இறங்குவதால் களைகட்டும் தேர்தல் பிரசாரம்

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களின்போது இருந்த பரபரப்பு இந்தத் தேர்தலிலும் கொஞ்சம் கூட குறையவில்லை.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்று விறுவிறுப்பாக நகர்ந்த தேர்தல் களம், தற்போது பிரசாரத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டி நிலவும் நிலையில், பிரசாரம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

இதில், ஏற்கனவே தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி உள்பட சென்னையில் உள்ள 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில்,முதல் நாளில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 6-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடியும் நிலையில், தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்புமனுக்களை திரும்ப பெறவும் வாய்ப்பு வழங்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

அதன்பிறகு, வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்குகிறார். இடை இடையே கட்சியின் முக்கிய தலைவர்களும் அவர்களுக்கு பக்க பலமாக வாக்கு சேகரிப்பார்கள்.

இனி, தமிழகத்தில் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு மாலை வரை, “எனதருமை வாக்காளர் பெருங்குடி மக்களே உங்கள் பொன்னான வாக்குகளை…” என்ற வாசகம் பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Source link