சென்னை,
தமிழகத்தில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, பர்கூர், காங்கேயம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்ற நிலையில், முதல் முறையாக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
35 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இப்போது அதே நிலை ஏற்பட்டு இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் தனித்து களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரட்டை தொகுதியில் அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
பெரம்பூர் தொகுதி
தலைநகர் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி, மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக பார்க்கப்படுகிறது. பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மூலக்கடை, எருக்கஞ்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதியான பெரம்பூரில், இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க.வின் கோட்டையாக பெரம்பூர் தொகுதியில், அக்கட்சி சார்பிலர் களம் இறக்கப்பட்டு கடைசி 2 முறை வெற்றி பெற்ற ஆர்.டி.சேகரே மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இந்தத் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், இளம் வாக்காளர்கள், கிறிஸ்தவ வாக்காளர்கள் அதிகம் என்பதால், தவெக தலைவர் விஜய்க்கு அது சாதகமாக அமையும் என்று தெரிகிறது. தொகுதியில் இன்று முதல் விஜய் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். அது மக்களிடம் எந்த வகையில் எடுபடுகிறது என்று பார்ப்போம்.
திருச்சி கிழக்கு
த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானது. மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், லூர்து அன்னை ஆலயம் ஆகியவை இந்த தொகுதியின் ஆன்மிக ஸ்தலங்கள் ஆகும்.
திருச்சியின் மையப்பகுதியில் இந்த தொகுதி இருப்பதால், முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும். திருச்சி மாநகராட்சியின் சில வார்டுகள் இந்தத் தொகுதியில் வருகின்றன.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வும், 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற இனிகோ இருதய ராஜே, இந்த முறையும் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் க.ராஜேசேகரன் களத்தில் இருக்கிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் கோதாவில் குதிப்பதால், இங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதி.
திருச்சி கிழக்கு தொகுதியிலும் பெண்கள், இளம்வாக்காளர்கள், கிறித்தவர்கள் வாக்கு அதிகம் உள்ளது. இந்த வாக்குகளை வைத்துத்தான் கடந்த முறை இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். இந்த முறை, அந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்பினால், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுபோன்ற சூழ்நிலை வந்தால், அவர் திருச்சி கிழக்கு தொகுதியையே விட்டுக்கொடுப்பார் என்று தெரிகிறது. காரணம், பெரம்பூர் தொகுதி சென்னையிலேயே இருப்பதால், தொகுதிக்கு வந்து செல்வதில் அவருக்கு சிரமம் இருக்காது என்று கூறப்படுகிறது.
