இபிஎஸ்ஸை பார்த்து ஊரே சிரிக்குது.. ‘இல்லத்தரசி கூப்பன்’ திட்டம் குறித்து ஆர்.எஸ். பாரதி அதிரடி – rs bharathi talks about dmk manifesto illatharasi coupon scheme

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் அறிவிப்பு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நேற்று முன்தினம் அறிவித்தது திமுக. இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையை நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசி கூப்பன் திட்டம் குறித்து திமுகவின் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

ஆர்.எஸ். பாரதி – எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தல் பரபரப்பை அதிகரிக்கும் விதமாக நேற்றைய தினம் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பலவேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்தான இல்லத்தரசிகளுக்கு ரூ. 8000 கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு தேவையாக பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஆர்.எஸ். பாரதி பேச்சு

இதுக்குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கூறுகையில், கடந்த முறை அவர் அறிவித்தபோது அனைவரும் கிண்டலும், கேலியும் செய்தார்கள். ஆனால் அவர் அறிவித்த எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்து முடித்தார். மீண்டும் ஆட்சி தொடர்வதற்காக தமிழ்நாடு மக்களிடையே இன்றைக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் என்ற உன்னதமான திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை
ஒருக்காலத்தில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை எல்லாம் பணக்காரர்கள் வீடுகளில் இருந்ததாக தான் வரலாறு. அவற்றை பாமர ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், இன்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருமான வரி கட்டாத இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கு எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அந்த பொருட்கள் இருந்தால் புதுப்பித்து கொள்ளலாம்.
இல்லத்தரசிகள் கூப்பன் திட்டத்தில் ரூ. 8000
புதிதாகவும் வாங்கி கொள்ளலாம் என எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்பட உள்ளது. இது இந்தியாவிலே வேற எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. மக்களுக்கு ஆப்சன். கடைக்கு சென்று காய்கறி வாங்குவதை போல, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளலாம் என்ற மகத்தான திட்டத்தை இன்று அறிவித்துள்ளார். இது நிச்சயமாக தமிழ்நாடு பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி
ஏற்கனவே கலைஞர் உரிமைத்தொகை ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அது தொடரும் என அறிவித்துள்ளார். அது போல இந்த கூப்பன் திட்டம், முழுமையாக பெண்களுக்கு சமூகத்தில் வளர்ச்சியையும், பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் இந்த அரசாங்கம் வழங்கும் என்பதை நிரூபித்துள்ளது. தமிழக மக்களுக்கு 200 இடங்களுக்கு மேலாக திமுகவை வெற்றி பெற செய்வார்கள் என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
தொடர்ந்து அவரிடம் எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்தான கேள்வி முன்வைக்கப்பட்டது. இப்படித்தான் விடியல் பயணம் எப்படி முடியும் என்றார்கள். எடப்பாடி பழனிசாமி மேடையில் வைத்தே நக்கலாக சிரித்து இந்த கேள்வியை கேட்டார். இப்போ அவரை பார்த்து ஊரே சிரிக்கிறது. ஆயிரம் ரூபாய் எப்படி கொடுக்க முடியும் என்றார்கள். அதையும் கொடுத்தார். எனவே இபிஎஸ் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என தெரியவில்லை.
அண்ணா ஆட்சி அமைத்த சமயத்தில் கஜானாவை திறந்து பார்த்தேன். அதில் கடன் பத்திரமும், உணவு பஞ்சமும் தான் உள்ளது. கஜானா காலியாக இருந்தாலும், இந்த அண்ணாதுரையின் மண்டை காலி இல்லை என்றார். அவர் சொன்னதை போலவே ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில் படியரசி போட்டார். இதெல்லாம் வரலாறு. அதே போல் இன்றைக்கு கடன் சுமை இருந்தாலும், தமிழக மக்களுக்காக அனைத்தையும் செய்வார். இவ்வாறு திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.