ராமநாதபுரம்,
கீழக்கரை நகராட்சி உதவியாளர் வேலை பார்த்த ஐயப்பன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ஐயப்பன் இவர் ராமநாதபுரம் நகராட்சியில் பணியில் சேர்ந்து 2024ல் கீழக்கரைக்கு இடம்பெயர்ந்தார். பணியில் சேர்ந்த போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த சான்றிதழ் அளித்துள்ளார். ஓய்வுபெற இருந்த நிலையில் சான்றிதழ்களை சரிபார்த்தபோது பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1968 தொடங்கியது அப்போதில் இருந்து இன்றுவரை தொடக்கப்பள்ளியாகதான் உள்ளது.
எனவே ஐயப்பன் வழங்கிய பள்ளிசான்றிதழ் போலி என தெரியவந்தது. இதுகுறித்து வட்டாரக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க கீழக்கரை நகராட்சி கமிஷனருக்கு அறிவுறுத்தினார். பின்னர் கமிஷனர் கிருஷ்ணவேணி ஐயப்பனை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
