சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை சந்திக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. நாம் தமிழர் கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.தவெகவும் அறிவித்துவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதைபோல சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அவர் இன்று மாலை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய். மு.க.ஸ்டாலினும், விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
