மாதம்பட்டி ரங்கராஜூ டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு  – Kumudam

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். 

இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா  இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்-ஐ மத்தியஸ்தராக நியமித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக இரு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Source link