சூடுபிடிக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் : ஸ்டாலின், விஜய், சீமான் வேட்புமனுதாக்கல்  – Kumudam

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியுள்ளது. 

கொளத்தூரில் ஸ்டாலின் 

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.

ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே வேட்புமனுவை முதலமைச்சர் தாக்கல் செய்தார். அதே போல 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரம்பூரில் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் ஆகிய தொகுதிகளில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளகிறார்.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய். இதை தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கி, விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

காரைக்குடியில் சீமான் 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை தொடங்கியுள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். காரைக்குடி தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து புளியால், முப்பையூர், சறுகிணி ஆகிய இடங்களில் சீமான் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டார்.

நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் 

த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். சிட்கோ நகர் சமுதாய கூடத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மைதிலியிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செங்கோட்டையன் திறந்தவேனில் நின்றபடி தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செங்கோட்டையன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Source link