நட்சத்திர ஓட்டலில் இரவு நிகழ்ச்சி: போதைப்பொருள் பயன்படுத்திய டாக்டர் உள்பட 8 பேர் கைது

கொச்சி,

கேரளம் மாநிலம் கொச்சி அருகே கடவந்தரா பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சம்பவத்தன்று இரவு நடந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கொச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடவந்தரா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் மற்றும் போலீசார் அந்த ஓட்டலை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கொக்கைன், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற உயர்ரக போதைப்பொருள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. சிலரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு போதைப்பொருளை கொண்டு வந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக திருவனந்தபுரம் சங்கமுகம் பகுதியை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷாஜி பெர்னாண்டோ, கலூர் பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ஜோஸ், வக்கீல் ரோஹித் நாயர், கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஜினோ முரளி, ஆலப்புழா நூரநாடு பகுதியை சேர்ந்த அக்பர் ஷா, பல் டாக்டர் பென்சி ராவுத்தர், கொல்லத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சையத் அலி பாத்திமா, கல்லூரி மாணவர் அமல் ரவுப் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பெண்கள் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சிக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த மற்றொருவரான எர்ணாகுளத்தை சேர்ந்த ஷோன், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஓட்டலில் நிகழ்ச்சி நடந்த தாக தெரிகிறது. அதில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link