சட்டமன்றத்தில் திருமாவளவன் குரல்… 2026 தேர்தல் மூலம் மீண்டும் மாநில அரசியல்- அடுத்த பாய்ச்சலில் விசிக! – thirumavalavan 2026 election contest plan with tamil nadu politics long term focus strategy

விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப எடுத்துள்ள முடிவு, பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது யாரும் எதிர்பார்த்திராத ஒரு நகர்வு என்கின்றனர். இதன் பின்னணி பற்றி விரிவாக அலசலாம்.

Thirumavalavan Tamil Nadu 2026 Election Contest(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக அரசியல் களத்தில் விஜய் போன்ற புதிய சக்திகள் வந்திருப்பதாக ஒருபுறம் பேசி வருகிறோம். இது 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளுக்கு சற்று நெருக்கடியாக மாறியுள்ளது. தங்கள் கட்சிகளை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். குறிப்பாக தேர்தல் அரசியலில் புதிய அணுகுமுறைகளை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை நம்பி களமிறங்கும் கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்தும்.

திருமாவின் முடிவிற்கு என்ன காரணம்?

மறுபுறம் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்று சொல்வது போல சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை மீறல் போன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. இவற்றுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டிய, ஆளுங்கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தேவை. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் தற்போது சிதம்பரம் தொகுதி மக்களவை எம்.பியாக இருக்கிறார்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது…சீமானை கடுமையாக விமர்சித்த திருமா!

சட்டமன்றத்தில் ஒலிக்கும் குரல்

எனவே தமிழ் மக்கள் நலன் சார்ந்த இவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டிய தேவை இருப்பதை விசிக மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்கின்றனர். மேலும் தவெக, நாம் தமிழர் கட்சிகளால் இளைஞர்கள், தலித்கள், ஓபிசி வாக்குகள் பெரிதும் சிதறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே திருமாவளவன் நேரடியாக போட்டியிட்டால் அந்த வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக தன்னுடைய இடத்தை தக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதை உணர்ந்து தான் மாநில அரசியலுக்கு திரும்பும் முடிவை திருமாவளவன் எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் மாறப் போகிறது.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டி

இதை கருத்தில் கொண்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற சிதம்பரம் தொகுதிக்குள் தான் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி வருகிறது. இங்கு 93,005 வாக்குகளை பெற்றிருந்தார். தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் இருக்கிறார். இவருக்கு 2026 தேர்தலில் செய்யூர் தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமாவளவனை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலை (2) காட்டிலும், மக்களவைத் தேர்தலில் (6) போட்டியிட்டது தான் அதிகம்.

விஜய் வருகையும், கொள்கை உறுதியும்

வெற்றி வாய்ப்பு 50, 50 என சம விகிதத்தில் கிடைத்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு மங்களூரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016 தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பும் முடிவை எடுத்திருக்கிறார்.
கொள்கை ரீதியாக திமுக உடன் இணக்கமான நின்றாலும், அரசுக்கு எதிரான விஷயங்களை, அரசு மீதான விமர்சனங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைக்கும் வலுவான குரலாக தான் இருக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மேலும் தன்னை வலுப்படுத்தி கொள்ள விரும்புகிறார். எனவே தான் திருமாவளவனின் முடிவை அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரும் வரவேற்றுள்ளனர்.