சாதி வெறியன் என்று பெருமை பேசியவருக்கு சீட்.. விஜய் அறிவித்த தவெக வேட்பாளருக்கு எதிராக வெடித்த போராட்டம் – tvk functionaries protest for change of cumbum constituency candidate

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக போட்டியிடவுள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் விஜய்க்காக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வகையில் கம்பம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.

தவெகவினர் போராட்டம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நீண்ட காலமாக விஜய்க்காக போஸ்டர் ஒட்டியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு சில பகுதிகளில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக போராட்டங்களும் எழுந்துள்ளன. இது தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் தவெக வேட்பாளருக்கு எதிராக போராட்டம்

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பத்தில் தவெக தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சியின் நிர்வாகிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுபாஷ் சந்திரன் என்பவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், அவரை தவிர வேற யாருக்காகவும் களத்தில் வேலை செய்ய மாட்டோம் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
உறுப்பினர் கார்டு கூட இல்லாதவருக்கு சீட்
அதோடு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை வன்மையாக கண்டிக்கிறோம். முகம் தெரியாத, உறுப்பினர் கார்டு கூட இல்லாத ஒருவர் எப்படி வேட்பாளராக இருக்க முடியும் எனவும் கடுமையாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்லாமல் வேறு சில தொகுதிகளிலும் முகம் தெரியாத ஆட்களை வேட்பாளாராக நியமித்துள்ளதாக தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
ஜெகநாத் மிஸ்ரா சர்ச்சை பேச்சு
மேலும், கம்பத்தில் தனக்கு ஆதரவாக போராட்டம் நடந்த இடத்துக்கு வருகை தந்த சுபாஷ் சந்திரனை, அவரது ஆதரவாளர்கள் தூக்கினார்கள். இதனால் எமோஷனலாகி அவர் கண்ணீர் விட்டு அழுதார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெண்டு நாட்கள் முன்பு வரை, சுபாஷ் சந்திரன் வேட்பாளர் என்று வேலை செய்தோம். இன்று முகம் தெரியாத ஒருவரை வேட்பாளாராக நிறுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இதனிடையில் கம்பம் தொகுதி வேட்பாளார் ஜெகநாத் மிஸ்ராவின் சர்ச்சைக்குரிய பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாதி வெறியன் என்று அறிவித்து கொண்டவருக்கு சீட்
அதில், நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டிய அவசியமில்லை. என் இனத்தை சார்ந்தவரை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்ப்பது தான் என் வேலை. இன்று தமிழ்நாட்டில் ஆறு கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்த செட்டியாரும் ஒன்று சேர்ந்தால் இரண்டு கோடி வாக்காளர்கள் இருக்கலாம். ஒன்றரை கோடி வாக்காளர்களாவது இருக்கலாம். இதை பேசினால் ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ ஆக பார்க்கிறார் என்பார்கள்.
நான் எம்எல்ஏவுக்கு மேலாக போய் விட்டேன். எந்த கட்சியை சார்ந்தவனும் நான் கிடையாது. ஜாதி வெறியன். இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் ஜெகநாத் மிஸ்ரா. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து விஜய்க்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு, 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனரான ஜெகநாத் மிஸ்ராவுக்கு எப்படி சீட் கொடுக்கலாம் என்று கம்பம் தவெகவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய் நண்பருக்கு சீட்
இதனிடையில் தூத்துக்குடியில் விஜய்யின் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதி உள்ளூர் நிர்வாகிகள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அஜிதா ஆக்னல் தரப்பு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடிக்கும், நடிகர் ஸ்ரீநாத்துக்கும் என்ன சம்பந்தம்? விஜய்யின் நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக சீட்டா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.