சாத்தான்குளம் வழக்கு: தண்டனை விபரம் ஏப்.2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 23-ந்தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு ஆகியவை தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

அவர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றையும் வருகிற 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 9 போலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் 30-ந்தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளின் சொத்து விவரங்களை மத்திய மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் ஏற்கனவே கேட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியான பிறகும் அறிக்கையை மத்திய மாநில அரசுகள் சமர்ப்பிக்கவில்லை. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சொத்து விவரங்களை தங்களால் சமர்ப்பிக்க முடியவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த நீதிபதி அறிக்கை வந்தால் தான் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையா அல்லது எந்த விதமான தண்டனை கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் இரண்டாம் தேதி கட்டாயமாக மத்திய மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Source link