சிவபெருமான் என்னை அழைக்கிறார் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி மாயம்

நகரி,

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீ ரென மாயமானார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் சைலஜா, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார்.

இதற்கிடையே, வீட்டில் மது ஹசிதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சிவபெருமான் என்னை அழைக்கிறார், அதனால் நான் சென்று கொண்டிருக்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மேடுபள்ளி போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மாணவி முன்பு வசித்த லாலா பேட்டை பகுதியில் ஒரு வாலிபருடன் பழகி வந்ததும், குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த 10 மாதங்களாக அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்த மது ஹசிதா. கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானத்தில் இருப்பது போலவே இருந்துள்ளார். சிவபெருமான் அழைப்பதாக கூறி மாயமான மாணவியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Source link