ஜெயிலர், லியோ படங்களின் வரிசையில் ‘லீடர்’ படமும் இடம்பெறும் – லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லீடர்’. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் லெஜண்ட் சரவணன் பேசும்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவரின் உரையில், “உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனது இரண்டாவது படமான ‘லீடர்’ வருகிற ஏப்ரல் 3-ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு அப்பா மற்றும் மகள் பாசப் பிணைப்பிற்குள் ஒரு கேங்ஸ்டர் நுழையும்போது ஏற்படும் மாற்றங்களே இப்படத்தின் கதை. இயக்குநர் துரை செந்தில்குமார் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இப்படத்தைச் செதுக்கியுள்ளார். இப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அரை மணி நேரம் போனில் பாராட்டியது மறக்க முடியாதது. இப்படத்தின் பாடல்கள் கதையோடு பயணிக்கும் வகையில் மிகச்சிறப்பாக வந்துள்ளன.

ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.ஐஸ்வர்யா லட்சுமியின் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம். இப்படத்தை அண்மையில் பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக இருப்பதாக பாராட்டினர். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் ‘லீடர்’ படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனம், ‘கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை நல்ல மனிதர்கள் மூலமாகவே செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்’. இந்தச் கோடை விடுமுறையை ‘லீடர்’ படத்துடன் கொண்டாடுங்கள்” என கூறியுள்ளார்.

Source link