சிவகாசி,
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான்கு முனை இல்லை நாற்பது முனை போட்டி இருந்தாலும் களத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று நேற்று வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு சின்ன குழந்தைகள் போல விவரம் தெரியாமல் பேசிவருகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கிறார். விஜயின் வார்த்தைகளில் விளையாட்டுத்தனம் தான் இருக்கிறது.
சினிமாவில் வேண்டுமானால் காமெடியனாக, ஆக்ஷன் நடிகராக நடிக்கலாம். ஆனால் அரசியலில் அவரது நடிப்பு எடுபடாது. விஜயின் பேச்சுகளை அரசியல் ஆர்வலர்கள் வேடிக்கையாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு அரசியல்வாதியாக உருவாவதற்கு உரிய பேச்சாக அவரின் பேச்சுகள் அமையவில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அரசியலில் ஒரு ஜோக்கராக விஜயை பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தன்னுடைய பெயரை தானே அறிவித்து கொள்கிறார். என்.டி.ஏ கூட்டணியின் துருவ நட்சத்திரமாக எடப்பாடியார் ஜொலிக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இ.பி.எஸ். முதல்-அமைச்சராக பதவியேற்பார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
