கடந்த 2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பவரை சொத்து பிரச்சினை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது சகோதரர் முனியசாமி(56) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் கொலை வழக்குபதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று மேற்சொன்ன முனியசாமியை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. அஜுகுமார், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரகலா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு கவிதா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 9 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
