கவுகாத்தி,
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஜடேஜா 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் அணிக்காக மீண்டும் களமிறங்கி, தனது முந்தைய அணியான சென்னைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். இப்போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர் 18 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அவர் எடுத்த சர்பராஸ் கான் மற்றும் சிவம் துபே ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி, 5 முறை சாம்பியனான சென்னை அணியை 127 ரன்களுக்கு சுருட்டியது.
போட்டியின் இடைவேளையில் பேசிய ஜடேஜா, “பிங்க் நிற ஜெர்ஸி எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவம் துபேவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நெட்ஸில் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு தெரியும். அதனால், ஆப் ஸ்டம்ப் வெளியே பந்து வீச முயற்சித்தேன். பெரிய ஷாட் அடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரியும்,” என்றார். துபே அவுட்டான பிறகு, ஜடேஜா கொடுத்த ரியாக்சன் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாதநிலையில் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 12.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.
