சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், அதிகப்படியான மக்கள் பயணம் செய்வதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்களை அதிக அளவில் மேற்கொள்வர்.
கோடை விடுமுறை தொடக்கம்
குறிப்பாக சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழியும். பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே ஹவுஸ்புல் ஆகும் அளவிற்கு திட்டமிடல்களை மேற்கொள்வர். இதையொட்டி சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை – கோவை – சென்னை செல்லும் 20643 / 20644 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை பொறுத்தவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
8 பெட்டிகள் உடன் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்தமுள்ள 495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.50 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.15 மணிக்கு சென்றடைகிறது. வாரத்தில் புதன் மட்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும். அப்போது ரயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். எஞ்சிய 6 நாட்களும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
16 பெட்டிகள் 1,060 இருக்கைகள் வந்தே பாரத் ரயில்
சென்னை – கோவை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் 530 இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. கோடை விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பயணிகள் வருகை இருக்கும் என்பதால், பெட்டிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அதன்படி, 16 பெட்டிகள் உடன் 1,060 இருக்கைகள் கொண்டதாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சென்னை – கோவை ரயிலில் ஏசி சேர் காரில் 1,385 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,505 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கோவை வந்தே பாரத் டிக்கெட் கட்டணம்
கோவை – சென்னை வழித்தடத்தில் ஏசி சேர் காரில் 1,235 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,330 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ரயிலில் முன்பதிவு அதிக அளவில் செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மார்ச் 31, 2026ஆம் தேதி நிலவரப்படி பார்த்தால் கோவை – சென்னை ரூட்டில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெயிட்டிங் லிஸ்டில் காணப்படுகிறது. கிட்டதட்ட WL76 வரை சென்றுவிட்டது. இடையில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தலா 51 மற்றும் 116 டிக்கெட்கள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.
மே மாத விடுமுறை ரயில் பயணத் திட்டம்
மே 5 முதல் 31ஆம் தேதி டிக்கெட்கள் தாராளமாக இருக்கின்றன. குடும்பமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. இதேபோல் சென்னை – கோவை ரூட்டில் மே ஒன்றாம் தேதி வரை வெயிட்டிங் லிஸ்ட் சென்றுவிட்டது. அதன்பிறகு 150க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் இருக்கின்றன.
எனவே மே மாதம் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போதே திட்டமிட்டால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணத்திற்கு தயாராகி கொள்ளலாம். இவ்வாறு கோடை விடுமுறையில் பயணிகள் வருகை அதிகமிருப்பதால் சென்னை – கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது.
