புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதியுடன் புதுச்சேரி அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், ஏப்ரல் 6-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு மத்திய உள்விவகார துறை மந்திரி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுச்சேரிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் காரில், கோவை விமான நிலையத்திற்கு சென்றார். எனினும், எதற்காக இந்த பயணம் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி ஏப்ரல் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் புதுச்சேரி பயணத்திற்கு இடையே அண்ணாமலையின் திடீர் பயணம் அமைந்துள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
