திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார்.. பிரதமர் மோடியை இபிஎஸ் கேள்வி கேட்கட்டும்.. சிபிஎம் சண்முகம் அதிரடி – cpm shanmugam comments on assembly election 2026 dmk manifesto

திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இது சம்பந்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். இன்று மாலை விவசாயிகளுக்காக ஏதேனும் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி – பெ. சண்முகம்
சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் முக்கிய அறிவிப்பாக ‘இல்லத்தரசி கூப்பன்’ அமைந்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சிபிஎம் கட்சியில் மாநில செயலாளர் பெ. சண்முகம் , திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் பல முனைகளில் போட்டி நிலவி வரும் நிலையில் பொதுக்கூட்டம், பிரச்சாரம் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையில் திமுக கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிடவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை மாநில செயலாளர் பெ. சண்முகம் அறிமுகம் வைத்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை
இது சம்பந்தமாக பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. ஏதோ வாக்குகளை பெற்றால் போதும் என நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பல கட்சிகள் கொடுத்து வரும் நிலையில், மாநில அரசாங்கத்துக்கும் நிதி நிலைமைக்கும் உட்பட்டு எதை செய்ய முடியுமோ அவற்றை தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டுள்ளது. நிச்சயமாக தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும் மற்றும் பெண்களுக்கான பல நலத்திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்கள்.
சிபிஎம் சண்முகம் வேண்டுகோள்
குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார் வழங்கப்படும் என்பது இதுவரை எந்த மாநிலத்திலும் சொல்லப்படாத ஒன்று. மிகுந்த ஆலோசனைக்கு பிறகு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத் தகுந்த வாக்குறுதி. அதே நேரம் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி சம்பந்தமான அறிவிப்பு இல்லை என்ற குறையை விவசாயிகள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள். நேற்று மாலை முதல்வரிடம், இதுக்குறித்து கேட்டு கொண்டிருக்கிறேன்.
முதலமைச்சர் அளித்த விளக்கம்
ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள சட்டத்தின்படி ஒன்றிய அரசாங்கம் அனுமதி கொடுத்தால் தான் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை நாம் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக அதற்கு அனுமதி தரவில்லை என்றால், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய்விடும் என்பதால் தான் அந்த வாக்குறுதியை வழங்கவில்லை என்று முதலமைச்சர் என்னிடம் விளக்கம் அளித்தார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி
இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் கடன் தள்ளுபடி போன்ற விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, இன்று மாலை திருவாரூர் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக இன்று மாலை அது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். ஆகவே இதுவரை வந்துள்ள தேர்தல் அறிக்கையில், திமுகவுடைய பேசு பொருளாக மாறியுள்ளது
அதோடு இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டாராகவும் திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. 525 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், அரசின் மூலமாக பலன் பெறாத குடும்பமே இல்லை என்ற நிலை ஏற்படும் என்றார். தொடர்ந்து திமுக 90 சதவிகிதம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். இபிஎஸ் கேள்வி கேட்பது என்றால், மூன்று தேர்தல்களில் வெறும் 10-20% சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடியை கேள்வி கேட்கட்டும் என மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.