ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர், இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 12 டன் எடையுள்ள 4 லட்சம் அளவிலான கிட்கேட் சாக்லேட்டுகளை லாரியுடன் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகைக்காக சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான புதிய ‘F1’ வகை சாக்லேட் பார்களை நெஸ்லே நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஃபார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைத்து, புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பு வரிசை ஆகும்.
இந்த புதிய வகை சாக்லேட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து புறப்பட்டு மார்ச் 26ம் தேதியன்று போலந்துக்கு செல்லும் வழியில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என இந்த சாக்லேட்டுகளை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கிட்கேட்டுடன் ஒரு சிறிய ‘பிரேக்’ எடுக்கவே நாங்கள் மக்களை ஊக்குவிப்போம். ஆனால் திருடர்களோ 12 டன் சாக்லேட்டுகளுடன் பெரிய ‘பிரேக்’ எடுத்து ஓடிவிட்டனர்” என இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்த நிறுவனம் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளது. நகைச்சுவையாக இருந்தாலும் சரக்கு திருட்டு ஒரு தீவிரமான மற்றும் அதிகரித்துவரும் கவலைக்குரய விஷயமாகும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் சாதாரணமாகவும், திட்டமிட்ட முறையிலும் நடைபெற்று வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பா முழுவதும் இனிப்புகளுக்கான உச்சக்கட்டப் பருவமான ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக, சாக்லேட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகளை இந்த கொள்ளை சம்பவம் ஆரம்பத்தில் எழுப்பியது. இருந்தபோதும் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், கடைகளில் தொடர்ந்து போதுமான இருப்பு இருக்கும் என்றும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. நுகர்வோருக்குப் பாதுகாப்பு குறித்த கவலைகள் எதுவும் இல்லை என்பதையும் அது உறுதிப்படுத்தியது.
கொள்ளையடிக்கப்பட்ட சாக்லேட்டுகள் அதிகாரப்பூர்வமற்ற சந்தைகளில் தோன்றக்கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. இதை சமாளிக்க பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ள தொகுதி எண்களை சரிபார்க்குமாறு சில்லறை விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட சாக்லேட்டுடன் ஏதேனும் ஒரு பொருள் பொருந்தினால், அதுகுறித்துப் புகாரளிக்கலாம், அதன்மூலம் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். காணாமல் போன லாரி மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் தேடும் பணியை இத்தாலி போலீசார் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
