டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது.
தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் படையினரை கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று உறுதிபடுத்தி உள்ளது. இதுதவிர 2 வீரர்கள் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
வீரர்கள் தொடர்பான தகவல்கள், அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டு உள்ளது. ஈரானின் ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது என இஸ்ரேல் குற்றச்சாட்டாக கூறியது. இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கிதியோன் சார் கூறும்போது, லெபனானில் உள்ள ஈரானின் தூதர் முகமது ரெசா ஷிபாவை வெளியேறும்படி லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் கெடு விதித்தது.
ரெசா வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டது. இருந்தபோதும், தன்னுடைய முடிவை லெபனானால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.
2024-ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்த விதியை மீறி கடந்த 2-ந்தேதி முதல் லெபனான் பிராந்தியத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவியுள்ளது. இந்த தாக்குதல் தீவிர விதிமீறலாகும் என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டை கூறினார். லெபனனில் நடந்து வரும் மோதலில் இதுவரை மொத்தம் 9 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
