கன்னடத்தில் ‘முகில்பேட்டை’ மூலம் அறிமுகமான கயாடு லோஹர், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார்.
டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கயாடுவிடம் தமிழில் பேச இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா? எனக் கேட்டதும் “நான் பல மொழிகளில் நடித்து வருகிறேன். நான் தென்னிந்தியாவை சார்ந்தவள் இல்லை. என்னால் முடிந்த வரையில் ஒவ்வொரு மொழியையும் பேச முயல்கிறேன். வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் போது, அதன் மையமே அம்மொழியை பேசுவதுதான். நான் ஒவ்வொரு மொழியையும் கற்க 100 சதவீத உழைப்பை போடுகிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தாருங்கள். நான் அடுத்து வரும் போது தமிழ், மலையாளம் மேலும் பிற மொழிகளையும் நன்றாக பேசுவேன்”
அடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லையே? என்ற கேள்விக்கு “நான் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்ப வர வேண்டும் என நினைக்கிறேன். டிராகன் படத்திற்கு பார்வையாளர்கள் கொடுத்த அன்பு பெரியது. இன்னும் வித விதமான கதைகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்ததும் அதனை அறிவிப்பேன்” என்றார் கயாடு லோஹர்.
