கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுகவை சார்ந்த கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துக் கொண்டு பேசினார்.
எஸ்.பி. வேலுமணி பேச்சு
அவர் கூறுகையில், ஒரு விஐபி தொகுதியாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மாறி விட்டது. யார் வந்தாலும் கவலை கிடையாது. அம்மன் அர்ஜுனன் வெற்றி பெற போவது உறுதி. ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கோவைக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. திமுக எதையும் செய்யவில்லை. நம்முடைய திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர்.
தொகுதி மாறிய செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியால் கோவைக்கு ஏதாவது செய்தோம் என்று சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது நமது மானப்பிரச்சனை. கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைவார். கவுண்ட் டவுன் துவங்கி விட்டது என தெரிவித்துள்ளார் எஸ்.பி. வேலுமணி. செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட உள்ள நிலையில், இது மானப்பிரச்சனை என அன்று பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த முறை தவறவிட்ட வெற்றி வாய்ப்பு
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனையடுத்து திமுக தலைமையிலான கூட்டணி கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக அங்கு வேலைகளை துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த தடவை வெற்றி வாய்ப்பை தவற விட்ட நிலையில், இந்த தடவை மகத்தான வெற்றி பெறுவதற்கு முதலமைச்சர் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தவெக விஜய் மீது விமர்சனம்
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட உள்ளதால், அங்கு திமுகவின் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையில் எஸ்.பி. வேலுமணி, தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். சினிமா வேற. கேமாரவுக்கு பின்னால் நடிக்கிறது. கட்சிக்காக 41 பேர் இறந்தார்கள். அவர் கரூருக்கே போகவில்லை. சொந்த கட்சியை சார்ந்தவர்களையே காப்பாற்றதவர். சினிமா வேற, அரசியல் வேற என்பதை இளைஞர்கள், பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தவெக எந்த தொகுதியில் வெற்றி பெற போவது கிடையாது. எனவே அனைவருடைய ஓட்டும் இரட்டை இலைக்கு தான் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
