புதுடெல்லி,
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி விதிப்புகள் மற்றும் சட்ட மாற்றங்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகின்றன. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 1961-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட்டு, எளிமையான வருமான வரி சட்டம் 2025 இன்று முதல் அமலாகிறது. இதன்படி, இனி முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற குழப்பங்கள் இருக்காது. அனைத்தும் ஒரே வரி ஆண்டு என அழைக்கப்படும்.
* வீட்டு வாடகைப்படி மீதான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுகிறது.
* குழந்தைகள் கல்வி படி, இதுவரை ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100 ஆக இருந்தது. இனி ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
* விடுதி செலவுப்படி, ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.300-ல் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
* அலுவலகம் வழங்கும் ஒரு வேளை உணவிற்கான வரிவிலக்கு வரம்பு ரூ.50-ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.
* இவற்றால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை வரி சேமிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
* நிறுவனத்திடம் இருந்து பெறும் பரிசுகளுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
* புதிய சட்டம் வந்தாலும், தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், சட்டத்தின் மொழி நடை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பழைய சட்டத்தில் இருந்து புதிய சட்டத்துக்கு மாறும்போது குழப்பம் ஏற்படாமல் இருக்க, வருமான வரித்துறையின் இணையதளம் 2 சட்டங்களுக்கும் ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், அப்பீல்கள் அனைத்தும் பழைய 1961-ம் ஆண்டு சட்டத்தின்படியே தொடரும். புதிய நடவடிக்கைகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும்.
* பங்குத்சந்தையில் டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் வர்த்தகம் செய்வதை குறைக்க பியூச்சர் வர்த்தகத்துக்கு, எஸ்.டி.டி., 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன் வர்த்தகத்துக்கு 0.10 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கான டி.சி.எஸ். வரி, 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கல்வி மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போதும், வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
