விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ தேர்தலுக்கு பின்பாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்காக அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ரிலீஸ் ஆகாத ஜனநாயகன் படத்தினை டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்றதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சர்ச்சைகளில் சிக்கிய தவெக வேட்பாளர்கள்
தவெக வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 234 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றுக்கட்சியினர் அதிகளவில் இடம்பெற்று இருந்தனர். இது பலவிதமான விமர்சனங்களை கிளப்பியது. அதே போல் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர், போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் உள்ளிட்ட சிலரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது சர்ச்சைகளை உருவாக்கியது.
மேட்டூர் தொகுதி வேட்பாளர்
இந்நிலையில் மேட்டூர் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வம், சேலம் கொளத்தூர் பகுதியில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக வருகை தந்தார். அவரை ஊருக்குள் நுழைய விடமால தவெகவினர் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளில் சிலர் இறங்கினார்கள். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் ஜனநாயகன் பட டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்றார்கள். 200 ரூபாய் டிக்கெட்டை ரூ. 350க்கு விற்று இருக்கீங்க.
கொள்ளத்தூர் பகுதியை சார்ந்தவர்கள் எதிர்ப்பு
எங்க கொளத்தூர்காரங்களை பார்த்தால் மனுஷங்களாக தெரியலையா என ஆவேசமாக ஒருத்தர் கேள்வி கேட்டார். எதுனால கட்சி ஆபிஸை கொளத்தூர்ல இருந்து எடுத்தாங்க. என்ன பிரச்சனைன்னு மட்டும் கேளுங்க எனவும் ஒருத்தர் குரல் கொடுத்தார். இதே கட்சி ஆபீஸ்ல அவ்வளவு வேலை பார்த்து இருக்கேன். இப்போ நான் குரல் கொடுத்தாலும் அத்தனை பேர் வருவாங்க. எங்க ஏரியாவுக்குள் யாரும் வர வேண்டாம். நாங்க எல்லாரும் கரெக்டா தான் கேள்வி கேட்குறோம்.
டிக்கெட் மோசடி
தியேட்டர்காரன் சொல்றான் கொளத்தூர்காரங்களுக்கு டிக்கெட் கிடையாதுன்னு. நாங்க படம் பார்க்கக் கூடாதா? எங்களுக்கு மட்டும் எதுக்காக 350 டிக்கெட் வைச்சு வித்தீங்க எனவும் ஆவேசமாக அங்குள்ள இளைஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனையடுத்து அங்குள்ள கட்சி நிர்வாகிகள் தவெகவினரை சமாதானம் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் செல்வம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.
விஜய்யின் ஜனநாயகன்
திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படாத ஜனநாயகன் படத்துடைய டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றதாக கூறி தவெக வேட்பாளருக்கு அக்கட்சியை சார்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படமான ஜனநாயகனை கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவும் துவங்கி மும்முரமாக நடந்தது.
தேர்தலுக்கு பின் ரிலீஸ்
விஜய்யின் அரசியல் வருகையை முன்னிட்டு உருவான இந்த படத்தினை, தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையில் சமீபத்தில் தான் தணிக்கை அதிகாரிகள் ஜனநாயகன் படத்தினை பார்த்த நிலையில், தேர்தலுக்கு பின்பாக இந்தப் படத்தினை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
