பெங்களூரு – திருச்சி கோடைக்கால சிறப்பு ரயில்
06007 எண் கொண்ட திருச்சி – எஸ்.எம்.வி.டி பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய் தோறும்) இயக்கப்படுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மொத்தம் 4 சேவைகள் மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் 06008 எண் கொண்ட பெங்களூரு – திருச்சி ரயில் ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. இதில் 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 8 சிட்டிங் சேர் கார் பெட்டிகள், 6 ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள், 1 செகண்ட் கிளாஸ் பெட்டி, 1 லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கரூர், சேலம் வழியாக – ஏப்ரல் 2 முதல் முன்பதிவு
திருச்சி – பெங்களூரு சிறப்பு ரயிலை பொறுத்தவரை கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். இதற்காக முன்பதிவு ஏப்ரல் 2, 2026 அன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை – சாண்ட்ராகச்சி சிறப்பு ரயில் சேவை
முன்னதாக 06077 / 06078 கொண்ட சென்னை சென்ட்ரல் – சாண்ட்ராகச்சி – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இது ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்கிறது. இதில் சாண்ட்ராகச்சி என்பது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ளது.
சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 6.45 மணிக்கு சாண்ட்ராகச்சி சென்றடைகிறது. இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மட்டும் இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, ஒரிசா வழியாக சிறப்பு ரயில் பயணம்
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 6 புறப்பட்டு 8ஆம் தேதி சென்னை வந்தடைகிறது. காலை 9 மணிக்கு சாண்ட்ராகச்சியில் புறப்படும் ரயிலானது மூன்றாவது நாள் பிற்பகல் 4.45 மணிக்கு சென்னை வருகிறது. இந்த ரயிலானது பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்குவங்கம் சென்றடைகிறது. குறிப்பாக நெல்லூர், தெனாலி, விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், விழியநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
திருவனந்தபுரம் – சாண்ட்ராகச்சி டிக்கெட் முன்பதிவு
06081 / 06082 எண் கொண்ட திருவனந்தபுரம் வடக்கு – சாண்ட்ராகச்சி – திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஏப்ரல் 3 – 5 மற்றும் ஏப்ரல் 6 – 8 என இரு மார்க்கங்களிலும் இயக்கப்படவுள்ளது. இது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி ஆகிய தமிழக ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
எந்தெந்த ரூட்டில் சிறப்பு ரயில் டிமாண்ட்?
இதுதவிர சென்னை – மதுரை, சென்னை – திருப்பதி, மயிலாடுதுறை – காரைக்குடி – விருதுநகர், திருச்சி – தஞ்சாவூர் மெமு ஆகிய வழித்தடங்களில் கோடைக்கால சிறப்பு ரயில்களை இயக்கினால் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
