நேற்று முன்தினம், பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே, பெரம்பூர், டி. நகர், கொளத்தூர்,வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என சொல்லப்பட்டது. ஆனால் டி. நகர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கான பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் “பாதுகாப்பு காரணங்களை” கருத்தில்கொண்டுதான் பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வீட்டிலிருந்தே பரப்புரை
இதற்கிடையில் புதுச்சேரியிலும் விஜய்யின் பரப்புரைக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 4 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதால் அவர் வீட்டிலிருந்தே பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடிதத்தை மாற்றி எழுதிய நிர்மல் குமார்
இந்த சூழலில் தான் விஜய் பரப்புரைக்கு உதவி கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றி கழகம் கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் சென்னை பரப்புரையில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு தரவில்லை எனவும் அவருக்கு ஏற்கனவே Y -பிரிவு பாதுகாப்பு இருக்க கூடிய சூழலில் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தவெக நிர்வாகி சி.டி.நிர்மல் குமார் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சரோடு சேர்த்து உள்துறை செயலாளரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அஜய் குமார் பல்லாவுக்கு மாற்றி கடிதத்தை எழுதி இருக்கிறார் நிர்மல் குமார்.
இந்த சூழலில் தான் உள்துறை செயலாளர் கூட யார் என்று தெரியாமல் ஓய்வு பெற்ற அதிகாரியும் தற்போதைய மணிப்பூர் ஆளுநருமான அஜய்குமார் பல்லாவுலகு கடிதம் எழுதிய தவெக என நெட்டிசன்கள் கிண்டல் சையது வருகின்றனர்.
இந்த சூழலில், பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில்கொண்டு, சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை பாதுகாப்பின்மை மற்றும் நேற்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் உடைந்த மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்தும் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “தவெக தலைவரின் உத்தரவின் பேரில் அவரது சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தோம். அதனை அமைதியாகவும் ஒவ்வொரு வார்த்தையாகவும் கேட்டார். காவல்துறை பெரம்பூரில் எங்கள் தலைவர் வேப்பமனு தாக்கல் செய்த பிறகு அங்கு உள்ள சாலையை மூடி உள்ளனர்” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் தலைவர் ஜனநாயக ரீதியாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 70 சதவீதம் பெண்கள் தான் எங்களது பரப்புரைக்கு வருகிறார்கள் என தெரிவித்தார். பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் போது அளவுக்கு அதிகமான பேருந்துகள் வந்தது எனவும் அந்த குறுகிய சாலைகளில் மக்கள் இயற்கையாகவே கூடினார்கள் எனவும் தெரிவித்தார்.
எங்கள் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கட்சி நிர்வாகிகளை அழைக்க வேண்டாம் என கூறினார். மேலும் பிரச்சாரத்தின் போது எந்த விளம்பரமும் நாங்கள் செய்யவில்லை எனவும் கூறினார்.
தமிழக காவலர்கள் சரியில்லை
எங்கள் தலைவர் பிரச்சாரத்திற்கு வரும் போது பக்கத்து தொகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்தார்கள். கொளத்தூரில் எங்கள் தலைவர் விஜய் வரும் போது எந்த காவலர்களும் இல்லை. ஆனால் மக்கள் கூட்டமே இல்லாத நிலையில்தான் முதல்வருக்கு 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்கு செல்கின்றனர் குற்றம்சாட்டினார்.
கரூரில் இருந்ததை போல…
தொடர்ந்து அவர் பேசுகையில் “கொளத்தூரில் கரூரில் இருந்தது போல் மக்கள் அலை இருந்தது. அதை பார்த்தும் எங்கள் தலைவர் பாதியில் பிரச்சாரத்தை நிறுத்தினார். பிரச்சார வாகனத்தில் மேலே ஏறி நின்றால் அது ரோட் ஷோ என்கிறார்கள் காவலர்கள், ஆனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் எந்த பிரச்சனைகளும் தொந்தரவும் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் புதுச்சேரியில் எங்கள் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அங்குள்ள காவலர்கள் அழகாக பாதுகாப்பு கொடுத்தார்கள் நாங்களும் அழகாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் தமிழகத்தில் உள்ள காவலர்கள் அப்படி இல்லை என கூறினார்.
கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். எங்கள் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்தில் பாட்டில்கள் வீசப்பட்டது அது இயற்கையாக நடந்தது போல் திமுக காட்டுகிறது. ஆனால் அது திமுகவால் முன்கூடியே திட்டமிடப்பட்டது” என்றார்.
