தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளை அதிமுக இழக்கும் என்பதால் அதன் வாக்கு வங்கி சரியும் என சொல்லப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாடு தலைமையான அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 27 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11தொகுதியையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதியையும் ஒதுக்கி இருக்கிறது.
கடினமாகிய தேர்தல் களம்
தர்மயுத்த காலத்திற்குப் பிறகு எடப்பாடி வசம் வந்த அதிமுகவை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முயற்சித்த அவர் தன்னுடைய பொதுச் செயலாளர் பதவிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என நினைத்த அனைவரையும் கட்சியை விட்டு விலக்கி இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அது அவருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது என்கின்றனர் சிலர்.
திமுக விழ வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி எடப்பாடி வெற்றி பெறக் கூடாது என்ற முனைப்பில் சசிகலா ராமதாசுடன் இணைந்து கூட்டணி வைத்திருக்கிறார். ஏற்கனவேகளத்தில் புதிதாக வந்திருக்கக்கூடிய விஜய் அம்சம் அதிமுக உட்பட அனைவரின் வாக்குகளையும் உடைக்கும் என சொல்லப்பட்ட இந்த சூழலில், தென் மாவட்டங்களில் எடப்பாடியின் வாக்கு சதவீதம் குறையும் என சில கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
சரியும் முக்குலத்தோர் வாக்கு!
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டை குறிவைத்து சசிகலாவும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை பெரும் நோக்கில் கிருஷ்ணசாமியும் களம் இறங்கி இருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இபிஎஸ் ஏற்காததால் கடுப்பாகிப்போன சசிகலா இபிஎஸ் -ன் தோல்விக்காக வேலை செய்ய தொடங்கி விட்டார். மேலும் அவரது கட்சி போட்டியிடும் 21 தொகுதிகள் முக்குலத்தோர் வாக்குகள் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளாகும். மேலும் சசிகலாவின் கட்சிக்கு எத்தனை ஓட்டு சதவீதம் போகிறதோ அத்தனை ஓட்டுகளும் அதிமுக ஓட்டுக்கள் தான் அது எடப்பாடிக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும் மறுப்பு
இதற்கிடையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார் ஆனால் பழனிச்சாமி அதையும் ஏற்கவில்லை. இதனை ஒட்டி அவரும் தனித்துப் போட்டியிடுகிறார். அவர் தனித்துப் போட்டியிடக் கூடிய ஒட்டப்பிடாரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில்,ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவிற்கு வரவேண்டிய தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாடார் வாக்குகள் கூட தற்போது அதிமுகவிற்கு கிடைக்காதது போல் தெரிகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், நாடார் உள்ளிட்ட மூன்று சமூக வாக்குகளையும் பெறுவதற்கு எந்த முயற்சியும் அதிமுக எடுக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். களத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருவதால் தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.
