திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 9-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அசாமில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“அசாமில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தும் வருகின்றனர்.
2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் இது தொடர்பாக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அதை எதிர்த்தது. பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மையினராக மாற்றி, சட்டவிரோத குடியேறிகளை வைத்து நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.
காங்கிரஸ் கட்சியினரைப் பொறுத்தவரை, மக்களின் நலனை விட, தங்கள் குடும்பங்களின் நலனுக்கே அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். காங்கிரஸ் அசாமின் வளங்களை பாதுகாக்கவில்லை, ஆனால் பா.ஜ.க.வோ மாநிலத்தின் பன்முக வளங்களை தனது வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சி அசாமின் ஆன்மா, பெருமை, அடையாளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சமரசம் செய்துகொண்டது. காங்கிரஸின் ஊழல் பல பகுதிகளுக்கும் பரவி, வன நிலங்கள் மற்றும் சரணாலயங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இதனால், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அழியும் நிலைக்குச் சென்றது. பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து, நிலைமையை மாற்றியுள்ளது.
அசாமில் தேயிலை தொழில் 200 ஆண்டுகள் பழமையானது. காங்கிரஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வைத்தது. ஆனால் பா.ஜ.க. இந்த தவறை சரிசெய்கிறது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அசாமின் அடையாளத்தைப் பாதுகாக்க, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி, ஆறாவது அட்டவணையின் கீழ் பழங்குடியினரை பா.ஜ.க. பாதுகாக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. மக்களின் ஆசீர்வாதத்துடன் அசாம் தேர்தலில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும். அதேசமயம் காங்கிரஸ், தேர்தலில் நூறு தோல்விகளைச் சந்திக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
