தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணத்தைக் கேட்டாலே ‘ஷாக்’ அடிக்கிறது – புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

புதுக்கோட்டை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 5 ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருது பெற்றது அ.தி.மு.க. அரசின் மருத்துவத்துறை மட்டும்தான். அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 2 கைகளை பொருத்தி சாதனை படைத்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கால்பந்து வீராங்கனை மருத்துவமனைக்கு சென்று காலை இழந்துள்ளார்.

சளிக்கு மருந்து கேட்டால் நாய்க்கடி மருந்து கொடுக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சி தொடர வேண்டுமா? நாட்டில் பணத்தை திருடுவார்கள், நகையை திருடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் கிட்னியை திருடுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கிட்னி திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுப்போம்.

இன்றைக்கு நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்திவிட்டார்கள். மேலும், 3 ஆண்டுகளில் 5 சதவீதமாக உயர்த்தி இன்று மின் கட்டணம் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி 112 சதவீதம் உயர்த்திவிட்டார்கள். குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு தி.மு.க. அரசுதான். இப்படி மக்கள் மீது வரி மேல் வரி போட்ட தி.மு.க. அரசாங்கம் மீண்டும் தொடர வேண்டுமா?”

இவ்வாறு அவர் பேசினார்.

Source link