புதுடெல்லி,
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் அளவிற்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, 2002-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, அவரது மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் துரைமுருகன் தரப்பில் தாக்கல் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
