மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

வெல்லிங்டன்,

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.

இந்நிலையில், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் லவ்ரா வெல்வெர்ட் 69 ரன்களும், அனிக் போச் 91 ரன்களும், டிரையான் 52 ரன்களும் குவித்தனர்.

347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் சுசி 8 ரன்களிலும், ஜார்ஜியா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் எமிலி கிர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிய எமிலி அரைசதம் கடந்தார். பின்னர் இசபெல்லாவுடன் ஜோடி சேர்ந்த எமிலி சதம் விளாசினார். இசபெல்லா 68 ரன்களில் அவுட் ஆனார்.

ஆனாலும், எமிலி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் நியூசிலாந்து 49.4 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து கேப்டன் எமிலி 139 பந்துகளில் 179 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

Source link