சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல்..- மீண்டும் வெற்றி பெறுவாரா? தொகுதி அலசல்! – udhayanidhi stalin chepauk constituency files his nomination papers today.

சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

udhaynithi stalin(புகைப்படங்கள்Samayam Tamil)

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது .

அந்த வகையில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளது அதன்படி காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 10 தொகுதிகளும் விசிகவிற்கு 8 தொகுதிகளும், சிபிஐ 5 தொகுதிகளும், மதிமுக 4தொகுதிகளிலும் இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

2 வது முறையாக களமிறங்கும் உதயநிதி

மேலும் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. 200க்கும் 200 என்ற இலக்குடன் திமுக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். காலை 11 -12 மணிக்குள் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதி நிலவரம் குறித்து ஓர் அலசல்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தொகுதிகளின் வரிசையின் பட்டியலில் சேப்பாக்கம் தொகுதி 19வது இடத்தில் உள்ளது. இது சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு தனி தனி தொகுதிகள் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரைக்கும் இந்த தொகுதிக்குள் வருகிறது.
அது மட்டுமின்றி எம்.ஏ .சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை பல்கலைக்கழகம், எழிலகம் ,பார்த்தசாரதி பெருமாள் கோவில், பெரிய மசூதி பாரம்பரியமான மேன்ஷன்கள் ,சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை, புதுப்பேட்டை வாகன உதிரிபாகன கடைகள் போன்றவை சென்னையில் முக்கிய இடங்கள் அனைத்தும் இங்கு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை 79 ஆயிரத்து 412 ஆண்களும், 84 ஆயிரத்து 396 பெண்களும் மற்றும் 5 83 பாலினத்தவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி
  • சேப்பாக்கம் தொகுதி நீண்ட காலமாக திமுகவின் பலம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.
  • 1977 மற்றும் 1980 1984 ஆகிய தேர்தலில் திமுக வேட்பாளர் ரகுமான்கான் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார்.
  • 1991இல் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். அதன் பிறகு 96, 2001 ,2006 ஆகிய தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
  • இதனை தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தலில் திமுகவின் ஜெ அன்பழகன் வெற்றி பெற்றார்.
  • இந்த சூழலில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

அப்போது 93 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இந்த முறை, நடைபெறும் தேர்தலிலும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டுயிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகம் சார்பில் டி. செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எனினும் இந்த தொகுதியில் முக்கிய போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் நிலவுகிறது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் ஆக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவின் ஆதரவு நிறைந்த தொகுதியாக சேப்பாக்கம் காணப்படுகிறது.
குறிப்பாக இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக உள்ளதாகவும் இதனால் திமுகவுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சற்று சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.