காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்: மு.க.ஸ்டாலின் தகவல்

ஈரோடு,

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் ஈரோட்டில் இன்று தி.மு.க. வேட்பாளர்களான முத்துசாமி (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை) சந்திரசேகர் (பவானி), சிவபாலன் (அந்தியூர்). நல்லசிவம் (கோபி) ஆகி யோரையும்,, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், மொடக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நின்று, தமிழ்நாட்டுக்கு புதிய விடியலை தந்திருக்கக்கூடிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க நான் வந்துள்ளேன். ஈரோடு, பெரியார் பிறந்த மண் மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரும் வாழ்ந்து வளர்ந்த ஊர் இந்த ஈரோடு.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பீர்கள். காரணம், திராவிட மாடல் என்பது ‘டெவலப்மெண்ட் மாடல்’ – அனைத்துத் துறைகளின் வளர்ச்சியாகவும், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றமாகவும், அனைத்து மாவட்டங்களின் முன்னேற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். ஆட்சிக்கு வந்ததும் ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது. ஈரோடு பேருந்து நிலையம், அணைக்கட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அயன் பட்டாக்களை உடனடியாக வழங்கியதும் திராவிட மாடல் ஆட்சிதான்.

நம்மை எதிர்த்து வாக்கு கேட்கிறவர்கள் நாங்கள் என்ன செய்தோம் என கேட்கிறார்கள். திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருக்கின்றனர். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் முழுக்க என்னால் நாள் முழுக்க சொல்லிக் கொண்டிருக்க முடியும். தன் அரசின் சாதனைகளை சொல்ல பழனிசாமியிடமோ, பிரதமரிடமோ எதுவும் இல்லை. மத்திய அரசின் சாதனை லிஸ்ட் நம்மிடம் இல்லை; ஆனால் அவர்களின் துரோக லிஸ்ட் உள்ளது.

மெட்ரோ ரெயில், 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்தது, நீட் தேர்வு, சிஏஏ சட்டம் கொண்டு வந்தது, வேளாண் சட்டம், கல்வி நிதியை தராதது, ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில உரிமைகளை பறிப்பது என துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் எடப்பாடி பழனிசாமியும் அவருடைய கூட்டாளிகளான பாஜகவும் தான்.

காலால் தவழ்ந்து சென்று, காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்ற பொறாமையில் இந்த பொய்யையும் புரளியையும் பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி. பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும் வேலைகளுக்கும் அனுப்பி வைத்து தலை நிமி வைத்திருப்பது திராவிட மாடல் அரசு. இந்த உண்மைகளை, அவதூறுகளை பரப்பி மறைக்கலாம், திசை திருப்பலாம், என்.டி.ஏ. ஆட்சியை கொண்டு வந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்யலாம் என கற்பனை கோட்டையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முன்வராத பழனிசாமிக்கு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச அருகதை இருக்கிறதா?. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்ட திருத்தங்களைச் செய்தது திமுக அரசு. குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இந்த உதிரிகளை பற்றி எல்லாம் நான் சொல்லனுமா?. பாஜகவின் கிளை செயலாளராக உள்ள ஈபிஎஸ்க்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்கவில்லை.

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சு.முத்துசாமி மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அமைதியாக பேசி எதையும் சாதிக்க கூடியவர். அதே போலவே என்னிடமும் பேசி இந்த ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தி காட்டியவர். அப்படி பட்ட நமது வெற்றி வேட்பாளர் சு.முத்துசாமிக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.எல்.சுந்தரம் அவர்கள், முன்பே சட்டப்பேரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பவானிசாகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு, பவானிசாகர் தொகுதி மக்கள், கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இன்று இரவுக்குள் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link