GST மாதிரி Stalin Sir Tax… திமுக, பாஜக வேற வேற இல்ல- திருச்சி கிழக்கில் தவெக விஜய் பரப்புரை! – tvk vijay criticized dmk and bjp in trichy east 2026 election campaign

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் மக்களிடம் வாக்கு சேகரிக்கையில், திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் பாஜக பற்றியும் பேசியுள்ளார்.

TVK Vijay Trichy East Constituency Campaign 2026 Polls(புகைப்படங்கள்Samayam Tamil)
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று (ஏப்ரல் 2) காலை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திறந்த வேனில் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் முன்னிலையில் பேசினார்.

முதலில் கேஸ் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் திமுக, பாஜக ஆகிய இரண்டு அரசுகளும் தான் காரணம். இதுபற்றி ஸ்டாலின் சாரிடம் கேட்டால் தங்களுக்கும், அதுக்கும் சம்மந்தம் இல்லை என்பார். தன்னுடைய சொந்த பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து செல்லும் மு.க.ஸ்டாலின், கேஸ் பிரச்சினைக்கு போய்விட்டு வரலாமே எனக் கேட்டுக் கொண்டார்.

ஈரான் போரால் நாடு தழுவிய அளவில் கேஸ் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓட்டல்கள் அடுத்தடுத்து மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீடுகளில் சிலிண்டர் முன்பதிவு செய்தாலும் வழக்கத்தை விட தாமதம் ஆகி வருவது கவனிக்கத்தக்கது.
மேலும் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கடந்த 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பற்றி கேள்வி எழுப்பினார். அதாவது,
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் தருவதாக சொன்னீர்களே, என்னாச்சு?
கரும்புக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் தருவேன் என்றீர்களே, என்னாச்சு?
ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ அதிகமாக தருவேன் என்றீர்களே, என்னாச்சு?
ரேஷனில் உளுத்தம்பருப்பு தருவேன் என்றீர்களே, என்னாச்சு?
நீட் தேர்வை ரத்து செய்வோம்னு சொன்னீங்களே, என்னாச்சு?
இவ்வாறு மு.க.ஸ்டாலினால் எதையெல்லாம் செய்ய முடியாதோ, அவற்றை எல்லாம் பொய் வாக்குறுதிகளாக அளித்திருப்பதை சுட்டிக் காட்டினார். இதுபோல் பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார். இதையடுத்து தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை தெரிவித்தார்.
கட்டணமில்லா ஆறு சிலிண்டர்கள்
அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டம்
திருமணமான பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுச்சேலை
60 வயது வரையுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500
அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
அடிப்படை வசதிகள் கூட செய்து தராத ஸ்டாலின் அரசை தூக்கி எறிவோம் என்று கூறினார். திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு பற்றி பேசுகையில், நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்திருப்பதாக கடும் விமர்சனத்தை முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டியிருந்தேன். ஜி.எஸ்.டி மாதிரி எஸ்.எஸ்.டி. அதாங்க ஸ்டாலின் சார் டேக்ஸ். இதுபற்றி திமுக தரப்பு வாயே திறக்கவில்லை. அவர்களே ஏற்றுக் கொண்டது போல மாறிவிட்டது.