கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுபோட்டால் பாஜக வலிமை பெறும்: ரேவந்த் ரெட்டி

திருவனந்தபுரம்,

சட்டசபை தேர்தலையொட்டி கேரள மாநிலத்தில் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, திருவனந்தபுரம் பூந்துறையில் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய ஜனநாயக முன்னணி) வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிரான ஒரே முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான். இடது முன்னணி (மார்க்சிஸ்ட் கூட்டணி), தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளது. இடது முன்னணிக்கு ஓட்டு போட்டால் அது பா.ஜனதாவிற்கு வலிமை சேர்க்கும். இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்ற இளைஞர்களுக்கு கேரளத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். சோனியா காந்தி தத்தெடுத்த தெலுங்கானா தற்போது வளர்ச்சி பாதையில் செல்கிறது. ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் கேரளம் தத்தெடுத்துள்ளது. மேலும், பிரசாரத்தின் போது நடிகர் மோகன்லாலின் சினிமா வசனத்தைப் பேசி ரேவந்த் ரெட்டி வாக்கு சேகரித்த போது மக்கள் உற்சாகமாக விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

Source link