கோவை மக்கள் 10க்கு 10 வெற்றியை தரவேண்டும்: மு.க.ஸ்டாலின்

கோவை,

கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நான் அதிகம் முறை வந்த மாவட்டம் கோவைதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் தந்துள்ளீர்கள். 2026 தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை தர வேண்டும். கோவை மக்கள் 10க்கு 10 வெற்றியை தரவேண்டும்.

கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். 2024 தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர். 40க்கு 40 வென்றோம். இப்பவும் அடிச்சு சொல்றேன், அவர் வந்தால் நமது 200 தொகுதி இலக்கு உறுதியாகிடும். மோடியும் அமித்ஷாவும் எத்தனை முறை வந்தாலும் நமது வெற்றி விகிகம் கூடிக்கொண்டே போகும்.

செந்தில் பாலாஜி என்றால் செயல் வீரர் என்று அர்த்தம். நினைத்ததை சாதித்துக் காட்டுபவர். அதனால்தான் கோவையில் நிற்கிறார். எந்த வேலையை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்பவர்.

போதிய மக்கள் தொகை இல்லை எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, ஆக்ரா நகரில் ஆளில்லாமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 16 லட்சம் மக்கள் உள்ள ஆக்ராவுக்கு மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி, கோவை, மதுரைக்கு மறுப்புதன் காரணம் என்ன?

மத்திய பட்ஜெட் தயாரிக்கும்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள். தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக. தமிழ்நாட்டை மொத்தமாக பழிவாங்குவதால் வாக்குச்சாவடி செல்லும்போது மக்களுக்கு பாஜகவின் ஞாபகம் வருவதில்லை.

தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. அவமானப்படுத்துகிறது. சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார். பெண்களின் பாதுகாப்புக்கு பிங்க் ரோந்து வாகனம். 2016 தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.

எதையும் செய்யாமல் அதிமுக தேர்தல் அறிக்கையை நாம் காப்பியடித்ததாக சொல்கிறார்.

பழனிசாமி ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொல்ல முடியுமா? பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம். எங்கள் சாதனைகளை முறியடிக்கும் வகையில் செயல்படுவோம் கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link