கூட்டணியில் இணைந்த தேமுதிக
சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த முறை இருந்த கட்சிகளுடன் புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளன. குறிப்பாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர்களுக்கு பத்து தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தீவிர பிரச்சாரம்
இதனையடுத்து திமுக தற்போது தேர்தல் சம்பந்தமான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி என பலரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினரான சபரீசன் , வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
திமுக கூட்டத்தில் சபரீசன்
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பாக கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதவராக வில்லிவாக்கம் நலச்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சபரீசனும் கலந்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் என்று 100% சதவிகிதம் நம்பிக்கை உள்ளது
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக விஜய்
விஜய்யின் தவெக கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் இரண்டு தொகுதிகளில் போட்டி போடுவது ஒரு தலைவரின் தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தற்போது கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். திமுக மீண்டும் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் சபரீசன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவரான சபரீசன், கடந்த சில ஆண்டுகளாக திமுகவுக்காக பின்னணியில் பல பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருக்காக நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் சபரீசன். மேலும் இந்த கூட்டத்தில் அவரின் மனைவியும், முதல்வரின் மகளுமான செந்தாமரையும் பங்கேற்றாறுள்ளார்.
திமுக வேட்பாளராக கார்த்திக் மோகன்
வில்லிவாக்கத்தில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் சார்பாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது.
ஆதவ் அர்ஜுனாவின் பொய் குற்றச்சாட்டு
இதனையடுத்து திமுக தான் தங்களுக்கு ஒடுக்குவதற்கு வன்முறையை கையில் எடுத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். இது சம்பந்தமாக போலீசார் இருவரை பிடித்து விசாரித்த நிலையில், அவர்கள் தவெகவினர் எனவும், அவர்களுடைய போனில் விஜய்யின் புகைப்படங்களும் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து மதுபோதையில் இருவரும் கண்ணாடி பாட்டிலை தூக்கி எறிந்தது விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
