வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்? யார் அந்த 28 பேர்..இழுபறிக்கு எண்ட் கார்டு! – congress candidate list to be released who are the 28 candidates

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Congress Candidate List(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்த முக்கியத் தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கே. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

85 சதவீத வேட்பாளர்கள் இறுதி

ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 85 சதவீத வேட்பாளர்கள், அதாவது 24 தொகுதிகளுக்கான பெயர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள 4 அல்லது 5 தொகுதிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலனையில் இருப்பதால், அவை குறித்து ராகுல் காந்தி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார், எனத் தெரிவித்தார்.

இன்று காலை வெளியாகிறது மெகா லிஸ்ட்

வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்று (ஏப்ரல் 3) காலைக்குள் முழுமையான 28 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். வெற்றி வாய்ப்புள்ள புதிய முகங்களுக்கும், அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளுக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

வாரிசு அரசியலுக்கு இடமா?

சில தொகுதிகளில் மூத்த தலைவர்களின் வாரிசுகள் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அவர் உறுதிபடத் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி கடைசி நாள் என்பதால், அறிவிப்பு வெளியான உடனேயே வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்யத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலில் இழுபறி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற அனைத்து முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டுப் பிரச்சாரத்தில் குதித்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் காட்டி வந்தது தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸிற்கு எத்தனை இடங்கள் என்பதில் நீண்ட இழுபறி நீடித்தது. கடந்த முறை போல 25 இடங்களா அல்லது கூடுதல் இடங்களா என்ற விவாதத்தில் பல நாட்கள் கடந்தன. இறுதியில் 28 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு, அந்த 28 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. செல்வாக்குள்ள தொகுதிகளைப் பெறுவதில் திமுக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின், வேட்பாளர் தேர்வில் ‘வாரிசு அரசியல்’ பெரும் தடையாக இருந்தது. மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்குச் சீட் வழங்கக் கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததே இந்தப் பட்டியலின் பெரும் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

டெல்லியில் நீண்ட ஆலோசனைகள்

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஸ்கிரீனிங் கமிட்டி பலமுறை கூடி விவாதித்தது. ஒரு தொகுதியில் 5-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், வெற்றி வாய்ப்புள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் கடும் சவால்கள் நீடித்தன.