சென்னை,
ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கா ளர்களுக்கு வாக்குப்பதிவை எளிமைப்ப டுத்தும் விதத்தில் புது யுத்திகளை தேர் தல் கமிஷன் அறிமுகம் செய்து வருகிறது. இந்த முறை வாக்களிக்கும் இ.வி.எம். எந்திரத்தில் ஒட்டப்படவுள்ள வேட்பாளர் பெயர் சீட்டில் (பேலட் பேப்பர்) வேட்பாளர்களின் புகைப்படங்களையும் அச்சிடுவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
முன்பு வேட்பாளர் பெயர் சீட்டில் மூன்று வரிசை இருக்கும். முதல் வரிசையில் வரிசை எண், இரண்டாம் வரிசையில் வேட்பாளரின் பெயர், மூன்றாம் வரிசையில் அவருக்கான தேர்தல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இந்த முறை வேட்பாளரின் வண்ண புகைப்படத்தையும் இணைப்பதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
வேட்பாளர் பெயர் சீட்டில் வண்ணப் புகைப்படம் எந்த இடத்தில் இடம் பெறும்? என்று கேட்டபோது, இரண்டாம் வரிசையில் இடம் பெற்றுள்ள வேட்பாளரின் பெயருக்கு அடுத்தபடியாக அந்த வேட்பாளரின் வண்ண புகைப்படம் வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் கொடுத்துள்ள புகைப்படம் தான், வேட்பாளர் பெயர் சீட்டில் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
வேட்பாளரின் பெயர்களை அகர வரிசையில் தேர்தல் கமிஷன் வரிசைப்படுத்தும். அதை 4 பிரிவுகளாக தேர்தல் கமிஷன் பிரித்துள்ளது. முதலாவது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள், அகர வரிசையில் (அந்தந்த மாநில மொழியில்) வரிசைப்படுத்தப்படும். 2-வதாக, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.
3-வதாக, அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும். 4-வதாக சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும். கடைசி பெயராக நோட்டா (யாருக்கும் வாக்களிக்கவில்லை) இடம் பெறும்.
அகர வரிசைக்காக, பெயர்களின் முதல் எழுத்தே கருத்தில் கொள்ளப்படும். அடைமொழியின் முதல் எழுத்தோ அல்லது இனிஷியலோ கணக்கில் எடுக்கப்படாது.
