திணரும் காங்கிரஸ், பாஜக… கிளைமாக்ஸ் நெருங்கியும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் தவிக்கும் டெல்லி மேலிடங்கள் – tn election 2026 congress bjp candidate list delay news updates

வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், வாரிசு அரசியல், ஆதரவாளர்களுக்கு சீட் போன்ற உட்பூசலால் காங்கிரஸ், பாஜகவில் வேட்பாளர் தேர்வு இன்றும் இழுபறியாகவே நீடிக்கிறது.

Congress BJP Candidate List Delay(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற மாநிலக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டுப் பிரச்சாரத்தில் குதித்துவிட்டன. ஆனால், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் – ராகுல் காந்தியின் வாரிசு எதிர்ப்பு முட்டுக்கட்டை

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸில், வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்தி மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். குறிப்பாக, முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வாரிசுகளுக்குச் சீட் வழங்கக் கூடாது. புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இதனால், தங்கள்ஆதரவாளர்கள், வாரிசுகளுக்குச் சீட் வாங்கத் துடிக்கும் மூத்த தலைவர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே டெல்லியில் கடும் ஈகோ மோதல் நீடிக்கிறது. சுமார் 85% இடங்கள் இறுதி செய்யப்பட்டாலும், மீதமுள்ள 4-5 தொகுதிகளில் நிலவும் வாரிசு மோதலால் மொத்த பட்டியலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக -சமூகச் சமன்பாடும், அதிருப்தி பயமும்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடும் பாஜகவிலும் நிலைமை சிக்கலாகவே உள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிட 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதால், யாரைத் தேர்வு செய்வது என்பதில் மாநிலத் தலைமை திணறி வருகிறது. மேலும், சமூக ரீதியான சமன்பாடுகளைக் கணக்கில் கொண்டு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலங்களில் வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி நிலவுவதால், அதிருப்தியாளர்கள் மற்ற கட்சிகளுக்குத் தாவி விடுவார்களோ என்ற அச்சத்தில் பட்டியல் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

அரசியல் ரீதியான பின்னடைவு

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. ஏப்ரல் 5 (ஞாயிறு) விடுமுறை என்பதால், கையில் இருப்பது நாளை (சனி) மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே. இந்த இறுதி நிமிட இழுபறியால் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தயார் செய்வதிலும், தேர்தல் வைப்புத் தொகை கட்டுவதிலும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மாநிலக் கட்சிகள் ஏற்கனவே இரண்டு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில், தேசியக் கட்சிகள் இன்னும் ‘ஸ்டார்டிங் பாயிண்டிலேயே’ நிற்பது அக்கட்சித் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.