லக்னோ,
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 141 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் 7 ரன்களில் ரன்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
போட்டிக்குப் பிறகு, தோல்வியால் அதிருப்தியடைந்த அணியின் உரிமையாளர் கோயங்கா, மைதானத்திலேயே பண்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதற்கு முன்பும், 2024-ஆம் ஆண்டு அணி கேப்டனாக இருந்த ராகுல் மீது இதேபோல் கோயங்கா மைதானத்தில் அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோயங்காவை ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆணவம் பிடித்த கோமாளி. அவருடைய பிகேவியரால் மிகவும் சங்கடப்படுகிறேன். ரசிகர்களுக்காகவும் வீரர்களுக்காகவும்தான் ஐபிஎல்-ஐ உருவாக்கினேன். நான் இப்போது தலைவராக இருந்திருந்தால் அவரை தடை செய்து, அணி உரிமையை ரத்து செய்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
