விஷு பண்டிகை ஸ்பெஷல் ஏற்பாடு
நடப்பாண்டு விஷு பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. எனவே சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 06126 / 06125 கொண்ட மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் ரயில் சேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலானது ஏப்ரல் 6, 13 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது.
மங்களூரு – சென்னை எழும்பூர் வழித்தட ரயில்
மாலை 4 மணிக்கு மங்களூருவில் புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் ஏப்ரல் 7, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.50 மணிக்கு மங்களூரு போய் சேர்கிறது. இந்த ரயிலில் 2 ஏசி டூ டயர் பெட்டிகள், 8 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 6 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 ஜெனரல் கிளாஸ் பெட்டிகள், 1 செகண்ட் கிளாஸ் பெட்டி, 1 லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணம்
இரு மார்க்கங்களிலும் காசர்கோடு, கன்ஹன்காடு, பய்யனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, திரூர், ஷோரனூர், பாலக்காடு, போடனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை (ஏப்ரல் 4, 2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு
ஐஆர்சிடிசி இணையதளம், ரயில் ஒன் மொபைல் ஆப் ஆகியவற்றின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு, ஹூப்ளி – கொல்லம் ஜங்ஷன், திருவனந்தபுரம் வடக்கு – சாண்ட்ராகச்சி உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
மலையாளிகளுக்கு ஏப்ரல் சிறப்பு ரயில் வசதி
இருப்பினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர் பயணம் மேற்கொள்வர் என்பதால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். இதை சமாளிக்க அடுத்தடுத்து சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் காத்திருக்கும் சூழல் காணப்படுகிறது.
இவர்களுக்கு புதிய சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்புகள் பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். மங்களூரு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் நாளைய தினம் 8 மணிக்கு முன்பிருந்தே காத்திருந்து டிக்கெட் முன்பதிவை உறுதி செய்வர் எனத் தெரிகிறது.
