ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிகோங்க.. வர்ற லஷ்மியை வேணாம் சொல்லாதீங்க.. தவெக அருண்ராஜ் பேச்சால் அதிர்ச்சி – tvk arunraj tiruchengode campaign speech creates controversy

தமிழக வெற்றிக் கழகத்துடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடவுள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரமும் துவங்கப்பட்டு விட்டது. இதனையடுத்து வேட்புமனுத் தாக்கல், வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் தவெகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தவெக நிர்வாகி அருண்ராஜ் பிரச்சாரத்தில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர்
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார் அருண்ராஜ். இதனையடுத்து அந்த பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது, அங்கிருந்த மக்களிடம் அருண்ராஜ் பேசியுள்ளது இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

விசில் சின்னம்
அதன்படி அவர் பேசுகையில், “கண்டிப்பாக ஓட்டுக்காக காசு கொடுப்பாங்க. அவுங்க பணம் கொடுத்தால் வாங்கிகோங்க. வர்ற லஷ்மியை வேணாம் சொல்லாதீங்க. அந்த பணம் நம்முடையது தான். அதுனால பணம் கொடுத்தால் வாங்கிகோங்க. ஆனால் ஓட்டை நம்ம விசில் சின்னத்துக்கு போட்ருங்க. இவ்வாறு திருச்செங்கோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் பேசியுள்ளார்.
ஓட்டுக்கு பணம்
முன்னாள் ஐஆர்எஸ் நிர்வாகியான அருண்ராஜ் இவ்வாறு பொறுப்பில்லாமல் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளது பலவிதமான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஓட்டுக்காக பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டியது தான் மாற்றம் என சொல்லும் கட்சியின் வேலை. அதை விட்டுவிட்டு இப்படியா பணம் வாங்கிக் கொண்டு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று ஒரு முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியே சொல்லலாமா இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தவெக தேர்தல் வாக்குறுதி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசங்களை கொடுத்து மக்களை கெடுப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் உதவித்தொகை, இலவச கேஸ் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.

அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் டப்பாக்கள் பறிமுதல்
இதுவே முரணாக பார்க்கப்படுகிறது. மாற்றம் என சொல்லிவிட்டு தவெகவும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனிடையில் திருச்செங்கோடு பகுதியில் விஜய், அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டிய சில்வர் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இலவசங்களுக்கு எதிராக அருண்ராஜ் பேசிவிட்டு, தற்போது அவரே ஓட்டுக்காக இலவசங்களை கொடுப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட்
இந்நிலையில் தற்போது யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு தவெகவுக்கு ஒட்டு போடுங்கள் என அருண்ராஜ் பேசியுள்ளார். இதனிடையில் தவெக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் சிலருக்கு உள்ளுரில் உள்ள தவெகவினர் ஆதரவு அளிப்பதற்கு மறுத்து வருகின்றனர். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் சீட் வழங்கியுள்ளதாக தவெகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link