திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் நீண்ட இழுபறியை தொடர்ந்து சற்றுமுன் 28 பேர் கொண்ட பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.
இன்னும் ஒரே ஒரு தொகுதி மட்டும்
மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் மாமனாருக்கு சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் மேலிடம் வேறொரு கணக்கில் இருப்பதால் இழுபறி நீடிக்கிறது. இன்று இரவிற்குள் அதற்கான வேட்பாளர் பெயரும் வெளியாகிவிடும் என்று மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
| எண் | தொகுதி | சிட்டிங் எம்.எல்.ஏக்கள் |
| 1 | பொன்னேரி | துரை சந்திரசேகர் |
| 2 | வேளச்சேரி | அசன் மவுலானா |
| 3 | ஸ்ரீபெரும்புதூர் | செல்வப்பெருந்தகை |
| 4 | சோளிங்கர் | ஏ.எம்.முனிரத்தினம் |
| 5 | திருவாடானை | கருமாணிக்கம் |
| 6 | காரைக்குடி | மாங்குடி |
| 7 | அறங்தாங்கி | டி.ராமச்சந்திரன் |
| 8 | சிவகாசி | அசோகன் |
| 9 | ஸ்ரீவைகுண்டம் | ஊர்வசி அமிர்தராஜ் |
| 10 | நாங்குநேரி | ரூபி மனோகரன் |
| 11 | கிள்ளியூர் | ராஜேஷ் குமார் |
பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக யாரை விமர்சித்தார்! Explained
புதுசா சேர்ந்த தமிழ்க்குமரனுக்கு சீட்
இந்த லிஸ்டில் இடம்பெற்றிருப்பவர்கள் தான் மீண்டும் நிற்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. அதையே தான் காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலும் உறுதி செய்திருக்கிறது. பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த நிலையில், அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் சீட் கிடைத்துள்ளது. எனவே சீட் பேரத்துடன் தான் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டிருப்பது தெரிகிறது. பென்னாகரம் தொகுதியானது சிட்டிங் எம்.எல்.ஏ ஜி.கே.மணியின் தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.
முன்னாள் எம்.பிக்கு எம்.எல்.ஏ சீட்
கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி அ.செல்லக்குமார் 2026 தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். உதகமண்டலம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏக்கு பதிலாக ஆர்.கணேஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சல் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ்க்கு பதிலாக தாரகை கத்பட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே விளவங்கோடு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இந்த தொகுதிக்கு டி.டி.பிரவீன் என்பவரை புதிதாக களமிறக்கியுள்ளனர்.
பிரவீன் சக்கரவர்த்தி ஆதரவாளருக்கு சீட் இல்லை
மயிலாடுதுறை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் எஸ்.ராஜாகுமார். இவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவான நபர். எனவே இவரை ஓரங்கட்டி விட்டு ஜமால் யூனுஸ் முகமதுவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| எண் | காங்கிரஸ் வகுத்த இரண்டு வியூகங்கள் |
| 1 | இளைஞர் காங்கிரஸில் இருந்து பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் சூர்ய பிரகாஷ், உசிலம்பட்டி டி.சரவணக்குமார் ஆகியோரை சொல்லலாம். |
| 2 | நன்றாக செலவு செய்யக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து களத்தில் நிறுத்தியுள்ளனர். |
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், இந்த பட்டியலில் பல்வேறு சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமெனில் சரிவிகித வாய்ப்பாகும். வாரிசுகளுக்கு மட்டுமல்ல, மற்றவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை பெரிய வெற்றியை பதிவு செய்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
