இரண்டு தொகுதிகள் தேர்வு
பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை இந்த முறை கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென விரும்பினார். குறிப்பாக சிங்காநல்லூர், கவுண்டபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டி போட வேண்டுமென அதற்காக அங்கு சில பணிகளிலும் ஈடுபட்டார். இதனையடுத்து அதிமுக கூட்டணியில் கோவையில் இரண்டு இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அண்ணாமலை எதிர்பார்த்தார்.
கோவை வடக்கு தொகுதி
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 சீட்டுகளில் கோவையில் ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை தெற்கில் வெற்றி பெற்ற சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், இந்த முறை வடக்கில் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகங்களும் எழுந்தது.
வானதி சீனிவாசன்
இதனையடுத்து கோவை வடக்கு தொகுதியை பெறுவதற்கு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இடையில் போட்டிகளும் நடந்தது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கோவை இல்லாமல் வேறு இடங்களில் சீட் ஒதுக்கினால் போட்டியிட மாட்டேன் என்ற முடிவையும் எடுத்தார் அண்ணாமலை. இந்நிலையில் அவரிடம் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வேறு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுமாறும் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் உறுதியான முடிவு
குறிப்பாக மொடக்குறிச்சி தொகுதியை அண்ணாமலைக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் கோவை அல்லாமல் வேறு இடங்களில் போட்டியிட போவதில்லை என்ற தன்னுடைய முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்
அவர் கூறுகையில், அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டது என்று கூற முடியாது. தம்பி விருப்பப்பட்டதை போன்று அவருக்கான பொறுப்புகள் கிடைக்கும். சீனியர் லீடர்களுக்காக யாரும் புறக்கணிக்கப்படவில்லை. எங்கள் பட்டியலை பார்த்தாலே சீனியர், இளையவர்கள் என அனைவரும் இடம்பெற்று இருக்கிறார்கள். கட்சிக்காக அனைவரும் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்கள். கட்சி தலைமைக்கு மூன்று பெயர்கள் அனுப்பப்படும். அதிலிருந்து ஒருவரை கட்சி தான் முடிவு செய்யும். எந்த பாரபட்சமும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தமிழிசை.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டி
இதனிடையில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக பணியாற்றிய அவர், மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பியுள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிரில் இருக்கும் மற்ற வேட்பாளர்களை பார்க்காமல் எனது பலத்தையும், அன்பையும் காட்டி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
