திருப்பத்தூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை. முதல்-அமைச்சர் கூறுகிறார் மீண்டும் அவர்தான் ஆட்சிக்கு வருவார் என்று. திமுக ஆட்சியில் இதுவரை நடந்தது போதும் இதுபோல நடப்பதற்கு மீண்டும் அந்த ஆட்சித் தேவையா? மீண்டும் தமிழ்நாடு தலைநிமிர அதிமுக ஆட்சியமைக்க வேண்டும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்குகளுக்காக சிறுபான்மையின மக்களுக்கு ஆசை வார்த்தைக்கூறுகிறார் ஸ்டாலின். அதிமுக மக்களுக்காக ஆட்சி செய்கிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.
குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் தேவையா? ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன், துர்க்கா ஸ்டாலின் என நான்கு அதிகார மையம் தமிழ்நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கிறது.
இன்று தமிழ்நாடு தலைகுனிய இந்த அதிகார மையங்கள்தான் காரணம். கடந்த முறை திமுக வெளியிட்ட அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் திமுகவிற்கு மூடுவிழாதான்.
அண்மையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி அதிமுக ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசு மக்களுக்கு தேவையா?. அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் ரேசனில் தரமான அரிசி வழங்கப்படும். ரேசனில் விலையில்லா பருப்பு, எண்ணெயும் வழங்கப்படும்.
திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். தேர்தல் அறிக்கையில் நிறைய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம். உங்களை மீட்டெடுக்க ஆட்சி அமைந்தால் ரூ.10 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்தால் விலையில்லாமல் பிரிட்ஜ் வழங்கப்படும். இப்போது வழங்கப்படும் ரூ.1000, ரூ. 2 ஆயிரமாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
